அரசமைப்புச் சட்டத்தின் மூலம் பிற்படுத்தப்பட்டோரின் உரிமையை பாதுகாத்தவர் அம்பேத்கர்: சத்தீஸ்கரில் நடந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி புகழாரம்

சத்தீஸ்கர் மாநிலம் பிஜாப்பூரில் ‘ஆயுஷ்மான் பாரத்’ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், சுகாதார மையத்தை திறந்து வைத்த பிரதமர் நரேந்திர மோடி. உடன், சத்தீஸ்கர் முதல்வர் ரமண் சிங் (இடது), மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி. நட்டா.   -  படம்: பிடிஐ 

நாட்டில் தாழ்த்தப்பட்டவர்கள் உள்ளிட்ட பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமைகளை, தாம் இயற்றிய அரசியல் சட்ட சாசனம் மூலமாக பாதுகாத்தவர் அம்பேத்கர் என பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டினார். 

சத்தீஸ்கர் மாநிலத்தில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி நேற்று அங்கு சென்றார். ராய்ப்பூர் விமான நிலையத்துக்கு வந்த அவருக்கு, முதல்வர் ரமண் சிங் உள்ளிட்ட மாநில அமைச்சர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதன் பின்னர், நக்சல் ஆதிக்கம் நிறைந்த பிஜாப்பூர் மாவட்டத்துக்குச் சென்ற அவர், அங்கு பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:

இந்தியாவில் ஒரு காலத்தில், தலித் மக்களுக்கும், பின்தங்கிய வகுப்பினருக்கும் அடிப்படை உரிமைகள் கூட மறுக்கப்பட்டிருந்தன. தலித் சமூகத்தில் பிறப்பதையே சாபக்கேடாக கருதிய காலகட்டம் அது. அதன் கொடுமையையும், வலியையும் முழுமையாக அனுபவித்தவர் அம்பேத்கர். 

இந்தக் கொடுமையிலிருந்து ஒட்டுமொத்த சமூகத்தையும் காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில்தான், மனிதராக பிறந்த அனைவருக்கும் சம உரிமைகள் வழங்கும் உயரிய அரசியல் சட்ட சாசனத்தை அவர் வடிவமைத்தார். 

அம்பேத்கர் என்ற ஒருவரால்தான், தலித் சமூகத்தினரும், பின்தங்கிய சமூகத்தினரும் தங்களின் உரிமைகளைப் பெற முடிந்திருக்கிறது. அம்பேத்கர் மட்டும் இல்லையென்றால், ஒரு ஒடுக்கப்பட்ட கிராமத்தில் பிறந்த மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த நான், இந்தியாவின் பிரதமராக உயர்ந்திருக்க முடியாது. 

வன்முறையைக் கைவிடுங்கள்

அனைவருக்கும் சம உரிமைகளை உறுதி செய்யும் அம்பேத்கரின் அரசியல் சட்ட சாசனத்தை அடிப்படையாகக் கொண்டே மத்திய அரசு செயல்படுகிறது. எனவே, உரிமைகளைப் பாதுகாக்க வேண்டி, யாரும் ஆயுதம் ஏந்த வேண்டிய அவசியமில்லை. நக்சல்கள், வன்முறைப் பாதையைக் கைவிட்டு தேசிய நீரோட்டத்தில் இணைய வேண்டும். நாட்டின் வளர்ச்சியில் அவர்களும் பங்கெடுக்க வேண்டும் என்றே அரசு விரும்புகிறது. இவ்வாறு நரேந்திர மோடி பேசினார்.

முன்னதாக, மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் முதல் சுகாதார மையத்தை பிஜாப்பூரில் மோடி தொடங்கி வைத்தார். 

குடூர் - பானுபிரதாப்பூர் இடையே புதிய பயணிகள் ரயிலையும் அவர் தொடங்கி வைத்தார். புதிய சாலை, மேம்பால திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினார்.- பிடிஐ

Post your comment

Comments

Be the first to comment

Related Articles